வணக்கம் தமிழ் உறவுகளே!

தமிழனாகப் பிறந்த நாம்; தமிழுக்கு ஏதாவது செய்யவேணும். எமது புலமை, திறமைகளை, மொழிப்பற்றை, மக்களுக்கு அறிவூட்டலை, துறைசார் அறிவை எனப் பல எண்ணங்களை நீங்களும் வெளிப்படுத்த முயற்சி எடுத்திருப்பீர்கள். இன்றைய உலகில் இவற்றுக்கு வலைப்பூக்கள் (Blogs) சிறந்த ஊடகமாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இவை நல்லறிவைப் பகிர இடமளிக்கின்றது.

எப்படியிருப்பினும் வலைப்பூக்களில் (Blogs) பதிவு செய்யப்படும் தகவலை வாசகர் (Readers) பக்கம் எடுத்துச் செல்ல மிகவும் சிக்கலாகவுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு குமுகாய (சமூக) வலைத் தளங்களில் உறுப்பினராகி நண்பர்களைத் திரட்டி அவற்றினூடாகப் புதிய பதிவுகளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கு. அதேவேளை வலைத் திரட்டிகளில் உறுப்பினராகி புதிய பதிவுகளை இணைக்க வேண்டியிருக்கு. இவ்வாறு தான் வலைப் பதிவர்கள் வலைப்பூக்களை நடாத்துகின்றனர்.

சிறந்த பதிவுகளுக்காக அச்சு ஊடகங்களை நம்பிய காலம் பறந்து போயிற்று. இன்று மின்னூடகங்களில் சிறந்த பதிவுகளை மட்டுமல்ல கற்றல், கற்பித்தல், அறிதல், அறிவூட்டல் எனப் பல நன்மைகளைப் பெறமுடிகிறது. ஆயினும், இவ்வாறான நன்மை தரும் தளங்கள் இங்கொன்றும் அங்கொன்றும் எல்லோர் கண்ணிலும் எத்துப்படாமலும் இருப்பதால் வாசகர் (Readers) எல்லோருக்கும் இந்நன்மைகள் போய்ச் சேருவதில்லை.

எனவே தான், எல்லோரது வலைப்பூக்களின் (Blogs) முகவரிகளையும் திரட்டி ஒரே தொகுப்பாக (Directory) வெளியிட எண்ணினோம். இதன் மூலம் இவற்றின் மொத்தப் பெறுதிகளை வாசகர்களுக்குச் (Readers) சென்றடையச் செய்யலாம் என்பது எமது நம்பிக்கை. அதற்காகச் சமயம், அரசியல், பாலியல் மற்றும் குமுகாயத்தை (சமூகத்தை) சீரழிக்கும் தளங்களை இணைக்க நாம் விரும்பவில்லை.

எமது முதன்மை நோக்கு; தூய தமிழைப் பேணுவதும் தமிழை மறந்த உறவுகளுக்குத் தமிழைப் புகட்டவும் உதவும் தளங்களைத் திரட்டித் தொகுப்பதே! ஆயினும் வாசகர் (Readers) விருப்பு, வெறுப்புகளைக் கருத்திற்கொண்டு பதினைந்து தலைப்புகளில் குறைந்தது இரண்டாயிரம் வலைப்பூக்களையாவது (Blogs) இணைக்க எண்ணியுள்ளோம்.

வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி வைப்பதே இத்தளத்தின் நோக்கம். இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

எம் இனிய தமிழ் உறவுகளே! எமது உண்மை நிலையை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். தமிழை, இலக்கியங்களை வெளிப்படுத்தும் தமிழ்ப்பற்றாளர்களே! அறிஞர்களே! உங்கள் தள முகவரிகளை இத்தொகுப்பில் இணைத்துக்கொள்ள முன்வாருங்கள். எமது எல்லோரது முயற்சிகளும் இத்தளத்தில் இணைவதன் ஊடாகத் தமிழைச் சாக இடமளிக்காது உலகெங்கும் வாழ வைக்கவாவது முடியுமென நம்புகிறோம்.

தமிழையும் நல்லறிவையும் வெளிப்படுத்தும் வலைப்பூக்களின் (Blogs) திரட்டு (Directory) இதுவாகும். இதனை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவித்துப் பார்வையிடச் செய்வதே, உங்களிடம் நாம் கேட்கும் உதவியாகும்.

இவ்வண்ணம்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்